தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்

திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 30ம் தேதியும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை 1ம் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.;

Update:2025-06-26 03:36 IST

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் பதின்மப் பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 30.6.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 1.7.2025 அன்றும் பேச்சுப்போட்டிகள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் (நகரம்) (ரத்னா திரையரங்கம் எதிரில்) வைத்து நடைபெறவுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்:

1. அம்பேத்கரின் இளமை பருவம்

2. அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி

3. இந்திய அரசியலமைப்புச் சட்டம்

4. அரசியலமைப்பின் தந்தை

5. சட்டமேதை அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்:

1. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

2. அம்பேத்கரின் சாதனைகள்

3. அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி

4. வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு

5. புத்தரும் அவரின் தம்மமும்

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:

1. கலைத்தாயின் தவப்புதல்வன்

2. சங்கத்தமிழ்

3. செம்மொழி

4. பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்

5. நெஞ்சுக்கு நீதி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:

1. அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்

2. திராவிட சூரியனே

3. குறளோவியம்

4. கலைஞரின் எழுதுகோல்

5. சமூக நீதி காவலர் கலைஞர்

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெறும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5,000, இரண்டாம்பரிசு ரூ,3,000, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000 மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000 வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 -2502521) தொடர்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி/ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேச்சுப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்