கோடை விடுமுறை: திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.;
கோப்புப்படம்
கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் ரெயில், பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ரெயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
(வண்டி எண் -06322) திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வருகிறது. பின்னர் 7.40 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
இந்த ரெயில் அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாததூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, நாரைக்கிணறு, நெல்லை சந்திப்பு, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.