பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக வாலிபர்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.;

Update:2025-10-28 07:14 IST

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் தீபன்குமார் (வயது 30). கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அர்ஷா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதல் 5 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து தீபன்குமார் தனது சொந்த ஊரில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது ஆசையை அர்ஷாவிடம் கூறினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது. அப்போது வேதமந்திரங்கள் முழங்க தீபன்குமார், அர்ஷாவின் கழுத்தில் தாலி கட்டி காலில் மெட்டி அணிவித்தார்.

இதுகுறித்து தீபன்குமார், அர்ஷா கூறுகையில், “எங்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடக்க வேண்டும் என விருப்பப்பட்டோம். தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நடந்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். நாங்கள் இருவரும் மீண்டும் கத்தாரில் பணிபுரிய உள்ளோம்” என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்