இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா
அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை என்று எச்.ராஜா கூறினார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது. ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும். ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் வாங்க கூடாது.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும்.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்குக்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளது, இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முடிவு செய்து இருப்பதையே காட்டுகிறது. தி.மு.க.வும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல். அ.தி.மு.க.வும், பா.ஜனதா தான் கூட்டணி வைத்துள்ளது. கல்வி கொள்கையில் தி.மு.க.வின் வழியை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படிக்க வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.