அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 26-ந் தேதி விரிவாக்கம்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.;

Update:2025-08-21 12:46 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார்கள். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்றைப் பெற்றது.

இதனால், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.8.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர்கள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90 சதவீததிற்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் களையப்பட்டதுடன் குழந்தைகளின் ஆரோக்யமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 14.3.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.8.2025 அன்று தொடங்கிவைக்க உள்ளார்கள். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் மாணவ மாணவியர்கள் தினசரி பயன்பெற உள்ளார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்