‘காவல்துறையினர் தங்கள் கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்’ - வானதி சீனிவாசன்
குழந்தைகளின் உயிரிழப்பு மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.;
கரூர்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் காவல்துறையினர் தங்கள் கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“இது மிகவும் துயரமான சம்பவம். சமீப காலங்களில் தமிழ்நாடு இதுபோன்ற துயரத்தைப் பார்த்ததில்லை. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் உயிரிழப்பு என்பது மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
மற்றொரு புறம், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில காவல்துறையின் கடமை. அந்த கடமையில் இருந்து காவல்துறையினர் தவறியிருக்கிறார்கள்.
இது முதல் முறை அல்ல. மற்ற அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. சில இடங்களில், கைது செய்யப்பட்டவர்களைக் கூட ஒழுங்கான இடத்தில் வைக்காமல் அலைக்கழிப்பது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் தி.மு.க. அரசாங்கம் துரோகம் இழைத்து வருகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க நேரில் வரவில்லை. ஒரு நடிகர் அவருடைய பிரபலத்தை வைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். இதுபோன்ற சூழல்கள் வரும்போது, நெருக்கடியான காலகட்டத்தில் துயரத்தை பங்கெடுத்துக் கொண்டு, மக்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால், இதுபோன்ற சூழல் வருவதற்கு அவரும் ஒரு காரணம் ஆகிவிட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தனி நபர் ஆணையம் மீது பா.ஜ.க.விற்கு நம்பிக்கை இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.