கவர்னர் உரை நடைமுறையை நீக்குவதே தீர்வு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-22 19:43 IST

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. அதில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ரவி, நேற்று தலைமை செயலகம் வந்தார்.

முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து கவர்னர், அரசின் உரையை படிக்காமல் வேறு சில கருத்துகளை கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு, இந்த சபையில் முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டும். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும், இதுதான் இந்த சபையின் மரபு. இது ஏற்கனவே கவர்னருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து கவர்னர், அரசின் உரையை வாசிக்காமல் எதோ கூறிவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் தொடர்ந்து சட்டசபையை அவமதித்து வருகிறார். எனவே ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்ற நடைமுறையை நீக்கும் வகையில் சட்டத்தை திருத்தும் முயற்சியை முன்னெடுப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகாவிலும் கவர்னர்கள் சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளா, இப்போது கர்நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை கவர்னர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை கவர்னர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும். இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்