பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.;

Update:2025-05-12 06:01 IST

'கோவில் மாநகர்' என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந் தேதி கோலாகலமாக நடந்தது. 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.

இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார்.

 

அங்கு கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடத்துடன் பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணிப்பு பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் பகுதிகளில் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.

அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

 

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.

அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்தி மொட்டை போட்டுக்கொண்டனர்.

வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் செல்கிறார். அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.

அங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு மதிய நேரத்தில் சாபவிமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

 

10 அவதாரங்கள்

அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது அழகர் 10 அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்துடன் பக்தி உலா வருகிறார். அதன்பின் மதியம் 2 மணிக்கு திருமஞ்சனமாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளுகிறார்.

இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்கு பின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

15-ந் தேதி காலை 7 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார். அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

 

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த திருவிழா பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தவிர டிரோன் கேமரா மூலம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் மதுரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்