தூத்துக்குடி: பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஒரு ஆண்டு சிறை

முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.;

Update:2025-09-13 15:49 IST

தூத்துக்குடி மாவட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலமேக வர்ணத்தின் மகன் கதிரவ ஆதித்தன். இவர் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர். இவரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் முத்துசெல்வன் (வயது 45), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் செய்வதற்காக, தனது மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் கொடுத்திருந்தார். அதேவேளையில் கதிரவ ஆதித்தனிடம் அவர் வேலையும் செய்து வந்தார்.

ஆனால் கதிரவ ஆதித்தன் தொழில் சார்ந்த உதவிகளை செய்யாமலும், வேலைக்குரிய சம்பளத்தை வழங்காமலும் முத்துசெல்வனை ஏமாற்றி வந்தார். இதனையடுத்து முத்துசெல்வன் தான் கொடுத்த பணத்தையும், தனது சம்பள பாக்கியையும் தருமாறு பலமுறை கேட்டுவந்தார்.

எனினும் கதிரவ ஆதித்தன் பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த முத்துச்செல்வன், தட்டார்மடம் காவல் நிலையத்தில் கதிரவ ஆதித்தன், தன்னை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார் அளித்தார்.

அதன்பேரில் தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி, கதிரவ ஆதித்தன் மீது பண மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணத்தின் மகன் கதிரவன் ஆதித்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்