அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைது.

கோவையில் அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டிய பா.ஜனதா நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-10-07 06:56 IST

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே குமாரபாளையம் சின்னக்கிணறு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 53). இவருடைய மனைவி நாகமணி. இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி(26), இளைய மகன் அருணாச்சலம்(23).இதில் திருமூர்த்தி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து வழக்கு தொடர்பாக திருமூர்த்தியின் நண்பரான அன்னூர் அம்மனி அருணா நகரை சேர்ந்த கோகுலகண்ணன், குமாரபாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்ற ராஜராஜசாமி, ராசுக்குட்டி என்ற ராஜேஷ் ஆகியோர் நாகராஜூக்கு உதவியதாக தெரிகிறது. இதில் சாமிநாதன், கோவை வடக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளராக இருந்தார்.இதற்கிடையே நாகராஜ் தனது மகன் திருமூர்த்தியின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கு விபத்து காப்பீடு செய்திருந்தார். அந்த காப்பீடு தொகை, நாகராஜூக்கு கிடைத்தது.

இதை அறிந்த கோகுலகண்ணன், சாமிநாதன் மற்றும் ராசுக்குட்டி ஆகியோர் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி திருமூர்த்தியின் பெற்றோரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கினர். பணம் கொடுக்கும் புகைப்படத்தை திருமூர்த்தியின் பெற்றோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு கோகுல கண்ணன் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து திருமூர்த்தியின் பெற்றோர், அன்னூர் பா.ஜனதா நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் கோகுல கண்ணன், ராசுக்குட்டி, சாமிநாதன் ஆகியோர் மேலும் ரூ.10 லட்சம் கேட்டு அண்ணாமலை பெயரை சொல்லி மீண்டும் மிரட்டுவதாக தனது பெற்றோருடன் சமூக வலைத்தளத்தில் திருமூர்த்தியின் தம்பி அருணாச்சலம் வீடியோ வெளியிட்டார்.

இதை அறிந்த அண்ணாமலை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த 3 பேர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நேற்று திருமூர்த்தியின் பெற்றோர் மற்றும் தம்பி ஆகியோரும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ராசுக்குட்டி, சாமிநாதன், கோகுல கண்ணன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கோவை வடக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளர் சாமிநாதன், கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்