திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.;
சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 4-ந்தேதி (நாளை) முதல் 6-ந்தேதி வரை சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதே போன்று, வருகிற 7-ந்தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும்.
இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.