இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
“ரெட்ட தல” படத்தில் தனுஷ் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய், இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரபு நாடுகள் அவசர ஆலோசனை; இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக் கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.
ஆசிய கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மற்றும் அதன் நிருபர்கள் 4 பேருக்கு எதிராக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில், டிரம்ப் சார்பில் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், டிரம்புக்கு எதிராக உள்நோக்கத்துடன் மற்றும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுரைகளை, பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அவர்களுடைய பத்திரிகையாளர்கள் 2 பேர் எழுதிய புத்தகமும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் உள்ளது என்றும் அது தொடர்பான கோர்ட்டு ஆவணங்கள் குறிப்பிட்டு உள்ளன.
பல ஆண்டுகளாக எழுதப்பட்ட இந்த நோக்கத்திலான கட்டுரைகள், 2024-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் வரை வெளிவந்துள்ளன. அவர்கள் இந்த கட்டுரைகளை, அவற்றின் பொய்மை தன்மையை பற்றி நன்றாக அறிந்திருந்தும், அவற்றை வெளியிட்டு உள்ளனர் என அதுபற்றிய டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறிப்பிடுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மறுதினம் (18.09.2025 வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை முழு விவரம்:-
சென்னையில் 18.09.2025 அன்று (வியாழக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொரட்டூர்: அன்னை நகர், டிவிஎஸ் நகர், டிஎன்எச்பி, பாடி, எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, தாதன்குப்பம், செந்தில் நகர், ஆசிரியர் காலனி, லட்சுமிபுரம், புத்தகரம், விவேகானந்த நகர்.
ராமாபுரம்: கிரி நகர், குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.
பூவிருந்தவல்லி: பை பாஸ், கோல்டன் ஹோம்ஸ் பிளாட்ஸ், எம்டிசி டிப்போ.
பெரம்பூர்: பத்மாவதி நகர், திருமால் நகர், சூரப்பேட்டை பிரதான சாலை, விஜயலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், வெங்கடசாய் நகர், கே.வி.ஆர்.நகர், பாலாஜி நகர், மூர்த்தி நகர், கட்டிட தொழிலாளி நகர், காஞ்சி நகர், பரிமளம் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை. முத்துமாரியம்மன் கோவில் தெரு. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய உரங்களை விரைந்து வழங்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வகையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 டன் டிஏபி, 12,422 டன் எம்ஓபி மற்றும் 98,623 டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை (மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 699 டன்) உடனடியாக வழங்கிடத் தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்திற்கு வழங்கிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது முற்றிலும் சரியானது. 2015-ம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்கு பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.
நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியை தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாக கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் தி.மு.க. அரசு மறுத்து வந்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க ஐகோர்ட்டு ஆணையிட்டது. ஆனால், அதனை கூட செய்ய தி.மு.க. அரசு மறுக்கிறது.
2-வது நாளாக சிபிஐ விசாரணை
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட நிகிதாவின் நகை திருட்டு வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை. கோவில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை. 7 பேர் விசாரணை முடிந்து சென்ற நிலையில் 42 பேரை விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ திட்டம்.