இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கடந்த ஜூலை மாத டெண்டரில் உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெறாத லாரிகள், குடிநீர், கழிவு நீர் லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விநியோகம் செய்யும் லாரிகளுக்கான டெண்டரில் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஞானசேகரன் என்பவரின் வாகன டெண்டர் விதிமீறல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் ஊராட்சியில் இருந்து, பாமகவைச் சேர்ந்த தொண்டர்கள் 25 பேர், டி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பழங்குடிகளுக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதியன் ஆதிரையின் புரட்சிவனம் தண்டகாரண்யம். படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு 2, 3 நாட்கள் அந்தக் காட்டிலேயே பயணித்ததைப் போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது. வசனங்கள், இயக்குநரின் சிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றுகளாகவுள்ளன என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
உள்நாட்டு தயாரிப்புக்கு முனைப்பு காட்டுங்கள் - பிரதமர் மோடி
சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருள்களை தயாரிக்க வேண்டும்.உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் சிறந்த தரத்தோடு அமைய வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்.
‘தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ - செல்வப்பெருந்தகை
சென்னை,
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை. மத்திய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது.
இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல். எந்தவொரு நிபத்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாமக எம்எல்ஏ அருளுக்கு புதிய பொறுப்பு - ராமதாஸ் உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான எம்.எல்.ஏ. அருளுக்கு கட்சியில் புதிய பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில இணைப் பொதுச் செயலாளர் இரா. அருள் எம்.எல்.ஏ. பாமகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இன்று (21ஆம் தேதி) முதல் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா எப்போது? நாசர் அளித்த பதில்
நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசியவிருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசுகையில்,
பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும் என்றார்.
‘விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை’ - காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் விமர்சனம்
சென்னை,
சென்னை ஆவடியில் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“த.வெ.க. தலைவர் விஜய் தனது எண்ணங்களை பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் கூட அவரிடம் கொள்கை தெளிவு இல்லை. மேலும், ஆரம்பத்தில் இருந்தே அவரது பேச்சுகளில் குறைந்தபட்ச அரசியல் மாண்பு என்பது இல்லை. இதுபோன்ற போக்கை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக்கொண்டது இல்லை, அவரது பேச்சை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘கமல்ஹாசன் எம்.பி. ஆகிவிட்டார்; அவரது தொண்டர்களின் நிலை என்ன..?’ - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
மதுரை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒரு சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு கட்சியை மட்டும் தொடங்குகிறார்கள். உதாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு அவர் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகிவிட்டார். இப்போது அவரை நம்பி வந்த தொண்டர்களின் நிலை என்ன? இதுபோன்ற அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.