இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்;
ஒவ்வொரு மாநிலத்திலும் பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வரும் என மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற வீரர் குகேசுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இதன்பின்பு அவர் பேசும்போது, திறமையாலும், உழைப்பாலும் தன்னுடைய கனவை குகேஷ் நனவாக்கி இருக்கிறார். இதற்கு அவர் எடுத்து கொண்டது 11 ஆண்டுகள் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் மாநகர பஸ்சில் கதவில் சிக்கி சிறுவனின் விரல் நசுங்கியது. பஸ்சின் கதவை மூடியபோது தாயின் கண்முன்னே சிறுவனின் விரல் நசுங்கியதாக கூறப்படுகிறது. சிறுவனும் தாயும் கதவை திறக்கும்படி கூச்சலிட்டும், நடத்துனர் கண்டுகொள்ளவில்லை என பயணிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சாலையில் நிறுத்தி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் பங்கேற்காத 20க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ரஷிய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார். மாஸ்கோவில் ரஷிய அதிகாரி கொல்லப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வாலாஜா சாலையில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்னை கலைவாணர் அரங்கிற்கு குகேஷ் அழைத்து வரப்பட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சிலர் திரித்து கருத்து சொல்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி அரசியல் தலைவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்.ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 2 ரிலீசின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் தீரமிகு எழுச்சியால் பயந்துபோய் அமைச்சர் நேரு அறிக்கை விட்டுள்ளார்.அச்சம் என்ற சொல்லே எடப்பாடி பழனிசாமியின் அகராதியில் கிடையாது. எங்களை பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.