இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
குஜராத் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாளை (ஏப்ரல் 2) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்.4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று பணி நாளாக ஏப்ரல் 26 செயல்படும். தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரன் கூறியுள்ளார்.
தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஏசிகளில் 111 ஏசிகளை திருடி, பாதி விலைக்கு விற்பன செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். 2 டன் திறன் கொண்ட 15 ஏசிகள் பெட்டிகள் மற்றும் ரூ.18.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலம் வெளியானது.
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. ஆனால், 80 சதவீதம் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மொத்தம் 298 பேர் உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.