இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கரூர், சேலம், ஈரோடு ஆகிய 3 பகுதிகளில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை, திருச்சியில் த லா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது தீவிர காயம் ஏற்பட்டது. இதன் பின்னர், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் உள்பட வேறு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இவர் இல்லாத ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், காயத்திலிருந்து முழு அளவில் குணமடைந்த பும்ரா மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
எனினும் அவர் பெங்களூருவுக்கு எதிரான நாளைய போட்டியில் களமிறங்குவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்தில் உள்ள தனியார் டயர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து சேதமடைந்தன.
இதனால், கரும் புகை எழுந்து வான்வரை பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி எல்லையில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன.
இ-பாஸ் சோதனைக்காக தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் ராம நவமி ஆகிய சிறப்புகளை பெற்ற நாளான இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கடலில் நீராடியும் மகிழ்ந்தனர்.
திருவாரூர் ஆழி தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ராமேசுவரத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி மதுரைக்கு புறப்பட்டார். பாம்பன் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். அவர் மதுரையில் இருந்து பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு செல்வார்.
தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்க சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் நிழல் பந்தல் அமைத்துள்ளனர்.