“எனது நண்பர், அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுடன்...” பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பாக இரு தலைவர்களும் உயர்மட்டக்குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், திசநாயகாவும் விவாதித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “எனது நண்பர், அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுடன் அநுராதபுரத்தில்…” என்று அதில் பதிவிட்டுள்ளார். மேலும் மோடியுடன், இலங்கை அதிபர் இருக்கும் புகைப்படமும் அதில் இணைக்கபட்டிருந்தது.
பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம்,
சிவகங்கை,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்
நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில், ஸ்ரீ ராமநவமி தேரோட்டம் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு, தொடங்கப்பட உள்ள ரெயில் சேவைக்காக தயார் நிலையில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்.
ராம நவமி நன்னாள் வாழ்த்துகள்: அண்ணாமலை
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ஶ்ரீ ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றிக் கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை கருவிகளுடன் பாம்பன் பாலத்தில் மத்திய வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. இதன்படி பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக வந்து திறந்து வைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து ரூ.7,750 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
இதன்படி வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சை ஆகிய பகுதிகளில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிம்லாவுக்கு அடுத்து மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகள் வசதிகள், 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மேலும் ரூ.727 கோடியில் 1703 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.