இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025

Update:2025-07-07 09:21 IST
Live Updates - Page 2
2025-07-07 06:57 GMT

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் பணம் திருடப்பட்டு உள்ளது. இவற்றில் 2 பேரிடம் தலா ரூ.1 லட்சமும், ஒருவரிடம் ரூ.2,500 பணமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 500 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

2025-07-07 06:20 GMT

திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நிறைவு... கண்கவர் புகைப்படங்கள்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனால் கோவில் விடுதிகள், தனியார் விடுதிகள் மற்றும் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளித்தன.

2025-07-07 05:54 GMT

தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-07-07 05:13 GMT

இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது

சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த, அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென நேற்று முடங்கியது. இதனால், செய்திகளை படிக்க முடியாமல் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை இந்தியாவில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கு முடக்கம் சரி செய்யப்பட்டது. இதனால், மீண்டும் செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. அதனுடன் இந்தியாவில் வெளிவரும், துருக்கி ஊடகங்களில் ஒன்றான டி.ஆர்.டி. வேர்ல்டு மற்றும் சீனாவின் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ் ஆகியவற்றிற்கான எக்ஸ் சமூக ஊடக கணக்குகளும் சரி செய்யப்பட்டன.

2025-07-07 05:11 GMT

மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 40,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 58,000 கன அடியிலிருந்து 40,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக 22,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2025-07-07 05:06 GMT

வியான் முல்டர் இரட்டை சதம்... முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 465/4

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

2025-07-07 05:03 GMT

தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025-07-07 05:01 GMT

பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

2025-07-07 04:38 GMT

பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும்.

சமூகநீதி - சமநீதி - சட்ட நீதி ஆகியவை அனைவர்க்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்