வீட்டில் பூஜை செய்வதுபோல் பெண்ணை ஏமாற்றி வெள்ளி ருத்ராட்ச செயின் பறிப்பு: 4 பேர் கைது
நெல்லையில் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், பூஜை செய்வது போல் ஏமாற்றி, பெண்ணை மிரட்டி பூஜை அறையில் இருந்த வெள்ளி ருத்ராட்ச செயினை பறித்துச் சென்றனர்.;
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் கூவாச்சிபட்டி, இந்திராகாலனியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இந்த பெண்ணிடம் கடந்த 6ம் தேதியன்று காவி உடை அணிந்த, பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 4 பேர் வந்து, உங்கள் வீட்டில் கஷ்டம் உள்ளதாகவும், பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று கூறி அவரது வீட்டிற்குள் நுழைந்து பூஜை செய்வது போல் ஏமாற்றி, அந்த பெண்ணை மிரட்டி பூஜை அறையிலுள்ள விளக்கில் இருந்த வெள்ளி ருத்ராட்ச செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பழனியம்மாள் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தேவர்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டார். அதில் மேற்சொன்ன குற்ற செயலில் ஈடுபட்டவர்கள், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து, குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆலங்குளத்தை சேர்ந்த 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவின் பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேற்சொன்ன குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு, கைது செய்து நடவடிக்கை எடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வெகுவாக பாராட்டினார்.