டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பணம் பறிப்பு: பொதுமக்களுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
இளம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்கும் போது கவனமுடன் இருத்தல் வேண்டும்.;
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் தங்களது முகவரியிலிருந்து FedEX Courier மூலம் சட்ட விரோத போதைப் பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தங்களது ஆதார், மின், வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், இதுபற்றி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தங்களை 'டிஜிட்டல் அரெஸ்ட் (Digital arrest)' செய்துள்ளதாக வீடியோ காலில் மிரட்டி வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைப் பறிக்கும் கும்பல்களிடம் தாங்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் மூலம் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் அவைகளின் நம்பகத்தன்மை பற்றி அறியாமல் ஆன்லைன் முதலீடுகளில் ஈடுபடுதல் பண இழப்புக்கு வழிவகுக்கும். ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாகக் குறிப்பிடும் விளம்பரங்கள் குறித்து முன்ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். முன் பின் அறிமுகமில்லாத நபர்கள் தரும் இத்தகைய ஆசை வார்த்தைகளை நம்பி சுய விவரங்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் பகிர்தல் கூடாது.
இளம் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்கும் போது கவனமுடன் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் தங்களது சொந்த புகைப்படங்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆபத்தில் முடிவடைய வாய்ப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற ஏமாற்றுதல்கள் ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மாநகர சைபர்கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.