இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
புதுச்சேரி முழுவதும் அரசு பஸ் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் 80% அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணி நிரந்தரம் கோரி 265 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில் பயணிகள் அவதியடைந்தனர்.
காரைக்காலில் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம். அதனால், பணி நிரந்தரம் செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் 101.3 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
வேலூரில் நாளை முதல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து இருக்கும். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம். நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க. அரசியல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தி.மு.க. தலைமை மாணவர்களிடமும், மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்து உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என முடிவாகி உள்ளது.
2023-ம் ஆண்டு ஜூலையில் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை மீண்டும் எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரவும் முடிவாகி உள்ளது.
ஐ.பி.எல். போட்டி தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
சென்னை அண்ணா நகரில், மேற்கு வங்காள மாநில இளைஞரான அனுகூல் என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கதவை உள்ளே இருந்தவர் திடீரென திறந்துள்ளார். இதனால், சைக்கிளில் சென்ற அனுகூல் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அந்த வழியாக வந்த மற்றொரு கார் அனுகூலின் தலையில் ஏறி இறங்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. வடபழனி ஏ.வி.எம். மின் மயானத்தில் குமரி அனந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது.
பீகாரின் கயா நகரில் வைத்து, மத்திய மந்திரி ஜித்தன் மஞ்சியின் பேத்தி, அவருடைய கணவரால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறும்போது, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதன் மூலம் மக்களிடம் இருந்து அ.தி.மு.க. தன்னை விலக்கி கொள்கிறது என கூறியுள்ளார். நீட் விலக்கிற்காக தி.மு.க. அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
தி.மு.க., நீட் தேர்வுக்கு எதிராக வேறு என்ன செய்ய வேண்டும் என அ.தி.மு.க. தெரியப்படுத்த வேண்டும் என கூறிய அவர், தி.மு.க. கூட்டணி உடையும் என்று இலவுகாத்த கிளியாக அ.தி.மு.க. உள்ளது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில், நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. அக்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வருகிறது என அவர் பேசியுள்ளார்.