இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு- 7 பேருக்கு தண்டனை அறிவிப்பு
நெல்லை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துக்களை அழித்த வழக்கில் 7 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது தலா ரூ.10,000 அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இஸ்ரேலுக்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் சமூக ஆர்வலர்கள் காசாவில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நிவாரணப் பொருட்களுடன் கப்பலில் சென்றனர். இஸ்ரேல் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்தபோது, இஸ்ரேல் படையினர் இடைமறித்து, அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: இழப்பீடு கொடுக்க ஆணையம் உத்தரவு!
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை காண ரூ.10,000 கொடுத்து டிக்கெட் பெற்றும், போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி அரசை விமர்சித்த ராகுல்
மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, 2047-க்கான கனவுகளை விற்று வருகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மோடி அரசு 11 ஆண்டுகாலம் மக்களுக்கு சேவை செய்ததாக கொண்டாடும் வேளையில், மும்பையிலிருந்து வரும் துயரச் செய்தி நாட்டின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது, பலர் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துள்ளனர், என்றும் ராகுல் குறிப்பிட்டுளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச குடியேறிகள் 66 பேர் கைது
டெல்லியின் வடமேற்கு பகுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வசிர்பூர் மற்றும் நியூ சப்ஜி மணடி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 11 குடும்பங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆண்கள், 16 பெண்கள், 30 குழந்தைகள் என 66 பேரை போலீசார் கைது செய்தனர்.