மாணவியிடம் பாலியல் சீண்டல்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பிரம்மதேசம் காவலர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். காவலர் இளங்கோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஒரே ஒரு ஆண்
ராமநாதபுரம் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் பெண் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு அறையில் ஆண் தேர்வர் ஒருவர் தேர்வு எழுத வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் உள்ளே அனுமதித்தனர் .
டீக்கடை பூட்டை உடைத்து கொள்ளை
செங்கல்பட்டில் டீக்கடையில் பூட்டை உடைத்து ரூ.90,000 கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவியில் சிக்கிய 2 நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.
இந்த நிலையில், ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மிக பலம்தான் - பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநில பட்ஜெட் 25 ஆண்டுக்கு முன் ரூ.4,000 கோடியாக இருந்தது, இப்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. உத்தரகாண்டின் உண்மையான சக்தி அதன் ஆன்மிக பலம்.உலகின் ஆன்மிக தலைநகராக மாற முடியும்.
உத்தரகாண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை இன்ஜின் பாஜ அரசு பாடுபடுகிறது. மாநில இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நான் கலந்துரையாடினேன். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அனைவரும் உற்சாகமாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாத காலத்திற்குள் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகாண்டிற்கு வருகை தந்தனர்.
3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் 3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
பீகார் சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட் ஒப்புகை சீட்டுகள்; பரபரப்பு தகவல்
பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், VVPAT எனப்படும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர் அறிந்து கொள்வதற்கும், உறுதி செய்து கொள்வதற்கும் உதவிடும் ஒப்புகை சீட்டுகள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ வெளியீடு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று வழக்கத்திற்கு மாறாக சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கி உள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க சற்று சிரமம் அடைந்தனர். மேலும் ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.