ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு; ஆதரவு கரம் நீட்டிய இந்தியா
ஆப்கானிஸ்தானின் கிழக்கே நேற்று இரவு 11.47 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் தொடர்ச்சியாக, குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்து விட்டது என தலீபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என்ற உறுதியை மத்திய வெளியுறவு துறை மந்திரி மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விஷயம். அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். இந்த தேவையான நேரத்தில் இந்தியா தன்னுடைய உதவியை வழங்கும்.
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று முதல் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் அந்தந்த இடத்தில் தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில், அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்துள்ளது. 2,500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 24 மணி நேரத்தில், வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் செப்.7ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், தரைக்காற்று அதிகமாக வீசியதால் அந்தமானில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பியது. விமானத்தில் பயணிகள் 174 பேர், சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தெருநாய்கள் சர்ச்சை - மன்னிப்பு கேட்ட நடிகர் படவா கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில், தெருநாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் கலந்துகொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் படவா கோபியின் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அவர் அதற்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு செய்யும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈ20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிப்பதாகவும், எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்கப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.
5-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை
வருகிற 5-ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால்பந்தில் பதக்க மழை...இப்போது பிரபல நடிகை...விரைவில் நடிகரை மணக்க போகிறார்...யார் தெரியுமா?
தற்போது திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வரும் இந்த நட்சத்திரம், இளம் வயதிலேயே தடகள வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, படிக்கும் போதே தனது பள்ளி கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் சர்ச்சை கேள்வி
டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான தேர்வில் GOD OF HAIR CUTTING என்ற மொழிப்பெயர்ப்பால் சர்ச்சையாகி உள்ளது. வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற 132வது கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.