இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025


தினத்தந்தி 1 Sept 2025 9:14 AM IST (Updated: 2 Sept 2025 9:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 Sept 2025 7:55 PM IST

    வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார்; பாஜக

    பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள், வாக்கு திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார்.

  • 1 Sept 2025 7:28 PM IST

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கர் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

    ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

  • 1 Sept 2025 6:41 PM IST

    ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு... ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

    2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் டசெல்டோர்ப் நகரில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  • 1 Sept 2025 5:54 PM IST

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை சபலென்கா காலிறுதிக்கு தகுதி

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்), கிறிஸ்டினா புக்ஸா (ஸ்பெயின்) உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    இவர் காலிறுதியில் மார்கெட்டா வோண்ட்ரூசோவா உடன் மோத உள்ளார்.

  • 1 Sept 2025 5:08 PM IST

    11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1 Sept 2025 5:06 PM IST

    உங்களுடன் பேச வேண்டும்... 10 நிமிடம் காத்திருந்து பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

    புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் வரும்படி கூறி பிரதமர் மோடியை அழைத்து சென்றார். இருவரும் காரில் ரிட்ஜ்-கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றனர்.

    அதற்கு முன், பிரதமர் மோடி வருவதற்காக 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்தபடியே காணப்பட்டார். அவர் வந்ததும் இருவரும் ஒரே காரில் ஒன்றாக சென்றனர். அப்போது பல்வேறு விசயங்களை பற்றி அவர்கள் உரையாடினர். கார் ஓட்டலை அடைந்த பின்னரும், அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் காரில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். அது ஆழ்ந்த அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

  • 1 Sept 2025 4:56 PM IST

    கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    இந்த நிலையில் கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • 1 Sept 2025 4:55 PM IST

    டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டர் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்ப்பு: அண்ணாமலை கண்டனம்

    தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

  • 1 Sept 2025 4:45 PM IST

    சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் நீர் வரத்து கணிசமாக அதிகரிப்பு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 61.72% ஆக அதிகரித்துள்ளது

    5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நீர் இருப்பு 7.257 டி.எம்.சி. ஆக உள்ளது

1 More update

Next Story