இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆளும் திமுக அதிகார அத்துமீறலில் ஈடுபடும் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. முக்கிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக - நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
துபாய் கார் பந்தயத்தில் 992 பிரிவில் 3ஆவது இடம் பிடித்தது நடிகர் அஜித்குமாரின் அணி.
பெரியார் தொடர்பாக சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழர் கட்சியின் ஒட்டு மொத்த கருத்து அல்ல. அவர் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர, தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கூறியுள்ளார்.
தேசிய கீதம் விவகாரத்தில் முதல்-அமைச்சரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது, அபத்தமானது. முதல்-அமைச்சரின் அகங்காரம் நல்லதல்ல என்று கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி: மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த பெருங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 5-ம் வகுப்பு பழங்குடியின மாணவிகள் 3 பேரை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கரவால் நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக கபில் மிஷ்ரா நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், இதுபற்றி இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள பா.ஜ.க.வின் மோகன் சிங் பிஷ்த் கூறும்போது, நாங்கள் யாரை வேண்டுமென்றாலும் நிறுத்துவோம்.
அவர் வெற்றி பெறுவார் என பா.ஜ.க. நினைக்கிறது. இது ஒரு பெரிய தவறு. புராரி, கரவால் நகர், கோண்டா, சீலாம்பூர், கோகல்புரி மற்றும் நந்த் நக்ரி தொகுதிகளில் என்ன நடக்கும் என காலம் பதில் சொல்லும்.
நான் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன். ஜனவரி 17-ந்தேதிக்கு முன் கரவால் நகர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்றார்.