இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புது வருட பிறப்புக்கு கவர்னர் ரவி வாழ்த்து
தமிழ் புது வருட பிறப்புக்கு கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் புத்தாண்டு வளமான தமிழ் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வரட்டும்" என தெரிவித்து உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. எனினும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காங்கோவில் பல ஆண்டுகளாக அரசுக்கும், ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம்.23 என்ற கிளர்ச்சியாளர் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால், 70 லட்சம் பேர் தங்களை பாதுகாத்து கொள்ள புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், சமீபத்தில், கிழக்கு காங்கோவின் கோம பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறினர். அதற்கு முன் கடந்த பிப்ரவரியில் புகாவு நகரையும் கைப்பற்றி இருந்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில், அந்த பகுதியின் மிக பெரிய நகரான கோம பகுதியில் நடந்த மோதலில், 52 பேர் வரை கொல்லப்பட்டனர்.
கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இதனை காங்கோவின் உள்துறை அமைச்சகம், உறுதி செய்து உள்ளது.
சூடான் நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ராக்கெட் தாக்குதலில், 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 83 பேர் காயமடைந்து உள்ளனர் என உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
"நிர்வாகிகள் யாரும் சோர்ந்து போகாதீர்கள், சில தினங்களில் சலசலப்பு சரியாகி விடும்"தைலாபுரம் தோட்ட ஆலோசனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.