இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்து விரைவில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
காரைக்குடி: தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்தின்போது எதிர்ப்பு தெரிவித்து தாலிக்கயிறுடன் இந்து முன்னணியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சலுகைகளை பேக்கரிக்கடை ரத்து செய்ததாக அறிவித்த போலீசார், இந்து முன்னணியினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தடைகோரிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் 29 கிலோ தங்க, வைர நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு நீதிமன்ற உத்தரவை அடுத்து நகைகள் இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அறிவாலயத்தின் செங்கலை உருவலாம் என கனவு காண்பவர்கள், ஒரு துகளைக்கூட அசைக்க முடியாது. திமுக இன்றளவும் அடித்தளத்தில் வலிமையாக இருப்பது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் வெற்றி நமதே என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செட் தேர்வு தேதி அறிவிப்பு:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.
அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் உட்பட யாராக இருந்தாலும், அதிமுக வளர வேண்டும் என நினைத்தால் வழக்குமன்றத்திற்கு செல்லக் கூடாது. 6 மாதம் பொறுமையாக இருங்கள். நாங்கள் எடப்பாடியாரை சந்தித்து நிலைமை பற்றி எடுத்து சொல்வோம் என அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.