தமிழ்நாடு பின்னோக்கிச் செல்கிறது - அன்புமணி
அடித்தட்டு பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் திமுகவிடம் இல்லை. சமூகநீதியை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் திமுகவினர் என்று அன்புமணி கூறியுள்ளார்.
அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து
அகமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
முருகன் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து ரெயில் சேவை - நயினார் நாகேந்திரன்
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மீக பாடலை இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் வெளியிட்டார். அருகில் தமிழிசை சவுந்தரராஜன், சுதாகர் ரெட்டி, கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். முருகன் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு ஜூன் 21ம் தேதி ரெயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை வருவதற்கும் ஜூன் 22ம் தேதி மாலை ரெயில் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் 3டி காட்சி வெளியீடு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முப்பரிமாண மாதிரிப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. முதல் கட்டப்பணி 2026 லும், 2-ம் கட்ட பணி 2027லும் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள், ஹெலிகாப்டர் தளம், குறுங்காடு போன்றவை எய்ம்ஸில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம்
கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச்சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.
ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் ராணுவத்தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் அலி சட்மானி கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளாது. ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில் ஜூன் 13-ல் தளபதியானவர் அலி சட்மானி
சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவை - அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். சென்னை மாநகரம் மாசடையாமல் தடுக்க பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும், பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தக் லைப் படத்திற்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது. படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதித்த தடைக்கு எதிரான வழக்கில் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்யட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
3 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்வரத்து சீரானதால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடும்பம், குடும்பமாக வந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள். பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க தடை நீடிக்கிறது.
ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சிறுவன் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், மிரட்டல், அத்துமீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.