ரொனால்டோ ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார். அதனை புன்னகையுடன் டிரம்ப் பெற்றுக்கொண்டார்.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 - திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தனது கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஏடிஜிபி ஜெயராம்
சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஏடிஜிபி ஜெயராம். தனது கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஆந்திர முதல்-மந்திரியின் தொகுதியில் பெண் மீது தாக்குதல்
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த திம்மரய்யா பெற்ற ரூ.80,000 கடனுக்காக அவரது மனைவியை மரத்தில் கட்டிவைத்து அந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தொகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கான அறிவிப்பு
பொதுமக்கள் முன் பின் தெரியாத நபர்களிடம் தங்களது வாகனங்கள், வீடு மற்றும் அலுவலகம் முதலியவற்றை வாடகைக்கு விடும்போது வசிப்பவர்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் மற்றும் புகைப்படம்,அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சரி பார்த்த பின்னர் வாடகைக்கு விடும்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆழியார் கவிஅருவியில் வெள்ளப்பெருக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்
சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் பரிந்துரைப்படி இந்த நடவடிக்கையை உள்துறை செயலாளர் எடுத்துள்ளார்.
பூவை ஜெகன்மூர்த்தி காவல் நிலையத்தில் ஆஜர்
சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வழக்கறிஞர்களுடன் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஜெகன் மூர்த்திக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது.
ஜூலை 16 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடங்க உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் 7 சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் மரக்காடுகள் படப்பிடிப்புத்தலம், கேரன்ஹில், 8, 9வது மைல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.