இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உ.பி முதல்-மந்திரி யோகி ஆதியநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். கும்பமேளாவில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, 8 பேர் மீதும் பி.என்.எஸ்-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 100 பௌர்ணமிக்கு ஸ்டாலின்தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் இபிஎஸ் உணர்வார். ஆட்சியை இழந்த 4 ஆண்டுகளில் அமாவாசையென உருட்டியே அரசியல் செய்கிறார் இபிஎஸ் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இந்தியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்கள்
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஒலிம்பிக் சாம்பியன்களான விக்டர் ஆக்செல்சன் மற்றும் ஆன் சே-யங் ஆகியோர், முறையே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மகா கும்பமேளா தீ விபத்து- 10 கூடாரங்கள் கருகின
மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஒரு அச்சகத்தில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள கூடாரங்களுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 10 கூடாரங்கள் கருகின.
கும்பமேளாவில் தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், மஹா கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஓட்டளிப்போம். ஆனால் யாருக்கு என்பது ரகசியம் என திண்டுக்கல்லில் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இன்று கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.