தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வருகிற 22-ந்தேதி மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தமிழகத்தில் நாளை 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, சென்னையில் லேசானது முதல் மித அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
ராணுவ அதிகாரி குறித்த பேச்சு-மன்னிப்பை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
ராணுவ அதிகாரி சோபியாவை விமர்சித்த விவகாரத்தில் ம.பி. பாஜக மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மிக மோசமாக பேசிவிட்டு, தற்போது வழக்கில் இருந்து விடுபடுவதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மன்னிப்பு கோர அருகதை இல்லாத பேச்சை மந்திரி விஜய் ஷா பேசியிருக்கிறார் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
பேரிடர் காலங்களில் சமூகவலைதளங்களில் வரும் புகார்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை தாளில் கையெழுத்தா? - ஜி.கே.மணி விளக்கம்
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தைலாபுரம் தோட்டம் வந்த மாவட்ட நிர்வாகிகளிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் வதந்தி. பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு பின் கட்சியை வழிநடத்த போவது கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது என்றார்.
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
இன்று காலை முதலே சென்னை புறநகரில் மேக மூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இரும்புலியூர் மேம்பால பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் மந்தமாக நடந்து வரும் நிலையில் சென்னை மார்கமாக வண்டலூர், பெருங்களத்தூரை கடக்கும் வாகனங்கள் அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்கிறது.இதனை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் விரைவில் திறப்பு - தெற்கு ரெயில்வே
கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும்.ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றது. ரெயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு சுவர்கள், வேலிகள் வைத்து விபத்துகளை தடுத்திட வேண்டும் என்றும் நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியான ஜோதி சங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.
சென்னையில் படிப்படியாக அதிகரிக்கும் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் படிப்படியாக மழை அதிகரித்து வருகிறது. கிண்டி, மாம்பலம், கோடம்பாக்கம்,கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருச்சி என்ஐடி விடுதியில் தங்கி பி.டெக் இறுதியாண்டு படிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த மாணவன் குல்திப் மீனா (21) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரியர் பயத்தில் இருந்த மாணவர் குல்திப் மீனா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.