அய்யப்பன் கோவில் செப்டம்பர் 7 வரை திறந்திருக்கும்
சபரிமலை அய்யப்பன் கோவில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 3, 2025 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு செப்டம்பர் 7 வரை திறந்திருக்கும். செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதால், சபரிமலை கோவில் இரவு 9 மணிக்கு சீக்கிரமாக மூடப்படும், அதன் நிறைவை குறிக்கும் வகையில் இரவு 8:50 மணிக்கு ஆத்மார்த்தமான ஹரிவராசனம் பாராயணம் நடைபெறும். செப்டம்பர் 16 முதல் 21, வரை மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் மீண்டும் திறக்கப்படும். பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் யாத்திரையைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை : சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் அரவிந்த் என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
"எங்களுடன் தான் இந்தியா இருக்க வேண்டும்: டிரம்ப் ஆலோசகர்
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து டிரம்ப் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “ ஜனநாயக நாடான இந்தியா, சர்வாதிகாரிகள் புதின், ஜின்பிங் உடன் கைக்கோர்ப்பது வெட்கக்கேடானது. இந்தியாவின் தேவை ரஷியா அல்ல, அமெரிக்கா தான் எங்களுடன் தான் இந்தியா இருக்க வேண்டும்” என்று கூறினார்.
கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் - இலங்கை அதிபர்
கச்சத்தீவு : “கச்சத்தீவை எக்காரணத்திற்கும் விட்டுத்தர மாட்டேன். கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்”. யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தான் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காபூல் பகுதியில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
சென்னையில் திறந்து கிடந்த மழைநிர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு
சென்னை சூளைமேட்டில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் அண்மையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது; அது மூடப்படாமல் இருந்த நிலையில் காலையில் நடைப்பயிற்சி சென்ற 45 வயது பெண் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 115-வது இடத்தில் இந்தியா
உலக அமைதி குறியீடு வெளியிட்ட 2025ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து 17-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது ஐஸ்லாந்து. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 115வது இடத்தில் உள்ளது.
மக்னா யானை மர்மமான முறையில் உயிரிழப்பு
நீலகிரி: மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைப் பகுதி ஊர்களில் ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த மக்னா யானை மர்மமான முறையில் சாலையிலேயே உயிரிழந்து கிடந்தது.
யானையின் உடல் சாலையில் கிடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஜேசிபி வரவழைக்கப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டது. யானை உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சில கிராமங்கள் முழுவதுமாக அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் வைரலாகும் காதலரின் செயல்
பீகார்: நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.