"தக் லைப்"- மன்னிப்பு கேட்டார் மணிரத்னம்
தக் லைப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம். ரசிகர்கள் நாயகன் படத்தைப்போன்று எதிர்பார்த்ததால் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது, கமலும் நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த போர் நிறுத்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்த நிலையில் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் ஜோஷி (77) இருதய கோளாறால் காலமானார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 6 FIFERகள் (5 விக்கெட்டுகள்) எடுத்துள்ளார்.
ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளன என டிரம்ப் கூறியுள்ள சூழலில், அதற்கு முன்பே ஈரான் தலைவரின் இந்த அறிவிப்பு வெளிவந்து இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான் மந்திரி அராக்சியும் போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். கத்தாரை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் மர்ம டிரோன்கள் தாக்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையில் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. இந்த 2 நாட்களில் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும். இவற்றில், மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தடையால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ந்தேதி முதலில் இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். இந்த சூழலில், பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிரான தடையை மே 23-ந்தேதி வரை முதலில் மத்திய அரசு நீட்டித்தது.
இதன்பின்னர் இந்த தடை ஜூன் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை இன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், ஜூலை 24-ந்தேதி வரையிலான ஒரு மாதத்திற்கு, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மத்திய அரசு தடையை நீட்டித்து அறிவித்து உள்ளது.
இதேபோன்றதொரு தடையை பாகிஸ்தான் அரசும் விதித்து, கடைப்பிடித்து வருகிறது. இதன்படி, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த முடியாத வகையில், அந்நாடு ஜூலை 24-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு தடையை நீட்டித்துள்ளது.
டிரம்பின் போர்நிறுத்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.