பஹல்காம் தாக்குதல்: காஷ்மீர் முதல்-மந்திரியுடன் ராகுல் காந்தி சந்திப்பு
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் வைத்து ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்து பேசினார். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில், குறிப்பாக மின்னணு மற்றும் காலணி போன்ற துறைகளில், தைவானிய முதலீடுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய தைவான் நாட்டு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு பிரத்யேகமான உற்பத்தி இடம் தேவை என்பதை உணர்ந்து. சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.
மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்” என்று அவர் கூறினார்.
சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு சிம்பு பாராட்டு!
கேங்கர்ஸ் படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கேங்கர்ஸ்' படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார். சுந்தர் .சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
25-04-2025 மற்றும் 26-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று சட்ட சபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல்.
கோவை காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் பிரின்ஸ்-ம் துணை வேந்தர் மாநாட்டில் பங்கேற்கவில்லை.