இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 April 2025 7:58 PM IST
கேரளாவில் ஐ.டி.பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி
கேரளாவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (ஐ.டி. பார்க்) மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வகை லைசன்ஸ் மூலம் ஐ.டி. பூங்காக்களில் பணியாற்றும் நபர்களைத் தவிர, பிறருக்கு மதுபானம் விநியோகம் இருக்கக் கூடாது எனவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 April 2025 7:57 PM IST
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரி ரங்கனின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன். மிகச் சிறந்த அறிவியலாளராக இருந்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 25 April 2025 7:54 PM IST
போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு : அரசு நிகழ்ச்சிகள் கூடாது - தலைமைச் செயலாளர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் (ஏப். 25) அன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 25 April 2025 7:52 PM IST
காஷ்மீர் தாக்குதல் - நிவாரணம் வழங்கும் பங்குச்சந்தை
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உள்ளதாக தேசிய பங்குச்சந்தை அறிவித்துள்ளது.
- 25 April 2025 7:51 PM IST
பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு
பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அனந்த்நாக், பந்திபுரா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, சிஆர்பிஎப், ஐம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளது.
- 25 April 2025 7:08 PM IST
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணிக்கும் இனி வரும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 25 April 2025 6:45 PM IST
போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் ரோம் நகர் வாடிகனில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று, போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
- 25 April 2025 6:40 PM IST
ஊட்டி, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி
ஊட்டி, கொடைக்கானலில் நடைபெற உள்ள கண்காட்சியின்போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 25 April 2025 6:17 PM IST
ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு
ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என்று ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய குழுவை நியமித்துள்ளது.
சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனவா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 25 April 2025 5:48 PM IST
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மனுவில் முக்கிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
















