தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் டிக்கெட் கட்டணம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சிறிதளவு மாற்றியமைக்கப்பட உள்ளது என இந்திய ரெயில்வே துறை தெரிவித்தது. இதன்படி, 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். இந்நிலையில், ரெயில் கட்டண உயர்வு வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பா.ம.க. இணை பொது செயலாளராக எம்.எல்.ஏ. அருளுக்கு பதவி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, அருளுக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். அருள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார் என கூறியுள்ளார்.
கத்தார் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம், கத்தாருக்கான ஈரான் தூதர் அலி சலேஹாபதியை அழைத்து, கத்தார் நாட்டில் அல்-உதீத் விமான படை தளத்தின் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி கத்தார் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஈரானை கடுமையாக சாடியுள்ளது. கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியதுடன், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. ஆவண விதிகளையும் இந்த தாக்குதல் மீறியுள்ளது. சர்வதேச விதிகளின்படி, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
ஈரானிய தூதருடன், கத்தாரின் வெளிவிவகார துறை மந்திரி சுல்தான் பின் சாத் அல் முரைகி நடத்திய சந்திப்பின்போது, கத்தார் மற்றும் ஈரான் நாடுகள் இடையேயான நெருங்கிய உறவுகள் மற்றும் நல்ல நட்பு என்ற கொள்கையை முற்றிலும் மீறும் வகையில் உள்ளது. பதற்றம் மேலும் அதிகரிக்காமல் அதனை தடுக்கும் வகையில், உடனடியாக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஈரானுக்கு உள்ளது என்று அப்போது அல் முரைகி வலியுறுத்தினார்.
அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தின் 100 இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவருடைய முதல் சுற்றுப்பயணம் தஞ்சையில் இருந்து தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வருகிறது.
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் பயணிகளின் வசதிக்காக, மின்சார ரெயில்களின் பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி, தற்போது, 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு ரெயிலில் இடவசதி கிடைக்கும் (21 சதவீதம் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்). இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்ள முடியும்.
கொகைன் போதை பொருள் வழக்கில், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட, நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.