வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஐகோர்ட்டில் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற விசாரணை அறைகள், வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேநீர் விலை ரூ.20 ஆக உயர்வு
சென்னையில் கடந்த வாரம் தேநீரின் விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கோவையிலும் முக்கியமான பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் விலை உயர்த்தி உள்ளனர்.
அதன்படி, டீ - ரூ.20 , காபி - ரூ.26 , பிளாக் டீ - ரூ.17
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்- மத்திய அரசு
2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டதின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு.
தமிழகத்தில் வரும் 8,9ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 8,9ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் செப்.8ஆம் தேதியும், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் செப்.9ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கேட்பது போல வந்து பாலியல் சீண்டல்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் முனியப்பனுக்கும், 20 வது வார்டு கவுன்சிலர் ரம்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ரம்யாவின் காலில் விழுந்து முனியப்பன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முனியப்பன் மன்னிப்பு கேட்பது போல தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் கவுன்சிலர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடு - அமைச்சர் கோவி.செழியன்
உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும், மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
விராலிமலையை அருகே 17ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டெடுப்பு
விராலிமலையை அடுத்த மாராயப்பட்டி கிராமத்தில் வயலின் நடுவே, கி.பி. 17ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர், சிவன் கோவிலுக்கு கொடையாக வழங்கியது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கடல்மட்ட அளவு உயரும்
கரியமில வாயு உமிழ்வு தொடர்ந்து வந்தால் 2100-ம் ஆண்டில் தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடல்மட்ட அளவு உயரும். கடல்மட்ட உயர்வால் பருவமழை காலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று சென்னை அண்ணா பல்கலை.யின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளருக்கு பதவி உயர்வு - முடிவெடுக்க உத்தரவு
ஆட்டோ சங்கர் வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் பவுன்-க்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.