இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது" -சென்னை உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு வீசி பாமக பிரமுகரை கொல்ல முயற்சி
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமகவை சேர்ந்தவர் ஆவார். இவர் இன்று அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகள் மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுகளை வீசியது. அத்துடன், அங்கிருந்தவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இதில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார். ம.க.ஸ்டாலின் மீதான கொலை முயற்சியை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்!
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் அரசுக்கு ரூ.274 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. 2025-26ம் ஆண்டில் ஏப்ரல் 30ல் ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய் கிடைத்ததே அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்ப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா? மு.க.ஸ்டாலின்
இங்கிலாந்து சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.யு.போப் கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா?; 19 வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ் மேல் தீராத காதல் கொண்டவர் ஜி.யு.போப்; தமிழ்ச் சுவையை உலகறிய, திருக்குறள், திருவாசகம், நாலடியார் நூல்களை மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்கமொழி பேசும் மக்களுக்கு எதிராக மொழித் தீவிரவாதத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. இங்கே ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை உங்களுக்கு வரும். மேற்கு வங்க சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியான பாஜகவை நோக்கி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.
அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப் படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
ரூ.5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸ்க்கு, சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதி இரவு 11.01 முதல் நள்ளிரவு 12.23 வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. வானம் தெளிவாக இருந்தால் கிரகண நிகழ்வுகளை முழுவதும் பார்க்கலாம். அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும் நிலவை வெறும் கண்களால் பார்ப்பதால் தீங்கில்லை என்று சொல்லப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் ஆடுதுரை பேரூராட்சி தலைவரும் பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி அலுவலகத்தில் கும்பலாக உள்ளே புகுந்த சிலர், பெட்ரோல் குண்டு வீசியதில் 2 பேர் காயமடைந்தனர். நூலிழையில் ம.க.ஸ்டாலின் உயிர்தப்பினார்.
கராச்சி-பெஷாவர் ரெயில்வே திட்டத்திற்கு நிதியளிப்பதில் இருந்து பின்வாங்கியது சீனா. பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு திட்டத்தில் இருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
சீனா-பாக். பொருளாதார வழித்தடத்தின் முக்கிய பகுதியாகக் கருதப்பட்ட இந்த ரெயில்வே திட்டத்திற்கு, $2 பில்லியன் நிதியளிக்கக் கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை பாகிஸ்தான் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இருமொழி முறை போதுமானது என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.