இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை, வரும் திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்திற்கு I'm Game என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் தயாராகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மற்றும் சீமானின் உதவியாளர் சுபாகர் ஆகியோர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும், ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சம்மனை கிழித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கவனத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக, 6 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏற்கனவே இருந்த மண்டலங்களுடன் சேர்த்து இனி மொத்தம் 20 மண்டலங்கள் இருக்கும்.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, ஓட்டுக்கு தி.மு.க. பணம் கொடுத்தால், அ.தி.மு.க.வும் கொடுக்க தயார் என கூறினார். அ.தி.மு.கவை விட்டு வெளியே சென்றவர்கள், கடிதம் எழுதி கொடுத்தால் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வை யாரும் பலவீனப்படுத்த முடியாது, வெளியேறியவர்கள் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் இனி எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மன்ஜீந்தர் சிங் சிர்சா இன்று கூறியுள்ளார்.
டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த திட்டம் மார்ச் 31-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என அவருடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த பிப்ரவரி 13-ந்தேதி அவருடைய எக்ஸ் வலைதளம் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
இதனால், அவருடைய கணக்கை நீக்கக்கூட முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ள கோஷல், தயவுசெய்து எனது எக்ஸ் தளத்தில் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அந்த கணக்கிலுள்ள எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.