நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.;
கூடலூர்,
தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வார இறுதி நாள், கேரளாவில் வருகிற செவ்வாய்க்கிழமை துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் நேற்று காலை முதல் சோதனைக்காக வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று செல்கின்றன. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் வருவதால் இ-பாஸ் சோதனையில் ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தீவிர இ-பாஸ் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனிடையே கூடலூர், நடுவட்டம், பைக்காரா, ஊட்டி பகுதிகளில் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் சமவெளியில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்து செல்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, தொடர் விடுமுறை காரணமாக சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தாழ்வான பகுதியில் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றனர்.