த.வெ.க. பிரசாரத்தில் துயரம்; காவல்துறையின் குளறுபடிகள்தான் காரணம் - அன்புமணி ராமதாஸ்
உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
கரூர்,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு காவல்துறையின் குளறுபடிகள்தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள்தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.