தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.;

Update:2025-09-30 14:44 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடத்துவதற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையை சேர்ந்த சுமார் 500 பேர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளார். ஆனால் பிரசார கூட்டத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்நிலையில் மாலை 4.45 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் வழியாக நுழைந்து, வேண்டும் என்றே காலதாமதம் செய்துள்ளார். மேலும் தெருவில் அனுமதி இல்லாமல் ரோடுஷோவை பல்வேறு இடங்களில் நடத்தி, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி, அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும், வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து இருக்கிறார்.

அத்துடன் மாலை 6 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்ஷனில் ராங்ரூட்டில், அதாவது ரோட்டின் வலதுபுறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்து சென்று, இரவு 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்ஷனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டும் என்றே காலதாமதம் செய்ததால், அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டத்தை அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். இதனால் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல், கொடுங்காயம், உயிர்ச்சேதம் ஏற்படும் என்று த.வெ.க. கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் பலரிடமும் போலீஸ் துணை சூப்பிரண்டால் பலமுறை எச்சரித்து, அறிவுரை வழங்கப்பட்டது.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பினை போலீசார் வழங்கினர். இருந்தபோதும் த.வெ.க. தொண்டர்களை மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் சரிவர ஒழுங்குப்படுத்தவில்லை. மேலும் ரோட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டு இருந்த குறுகிய, சரிவான தகர கொட்டகைகளிலும், அங்கிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்களை ஏறி உட்கார செய்ததால், தகர கொட்டகை உடைந்தும், மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்து இருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த தொண்டர்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

த.வெ.க. கட்சியின் கரூர் ஏற்பாட்டாளர்களுக்கு விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்தபோதிலும், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் வேண்டும் என்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தியும், அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பல மணி நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோர்வு அடைந்தனர்.

நீண்டநேரம் காத்திருப்பு, போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால், மக்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதன் விளைவாக, மேற்படி சம்பவத்தில் அதிக அளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதேநாளில் விஜய் நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியின் பெயர் பலகை மீது சிலர் ஏறி நின்றதால் அது இடிந்து விழுந்தது. இதில் ஆஸ்பத்திரியின் கண்ணாடி சுவர், கண்காணிப்பு கேமரா போன்றவை சேதம் அடைந்தன. இதுகுறித்து ஆஸ்பத்திரியின் மேலாளர் அரிச்சந்திரன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், த.வெ.க. மாவட்ட செயலாளருமான சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் மீது விஜய் வருகையையொட்டி அனுமதிக்கப்படாத இடங்களில் சுவரொட்டி ஒட்டுதல், போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைத்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது உள்பட 6 வழக்குகள் தனித்தனியாக போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட த.வெ.க. நிர்வாகிகளை கைது செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று, நேற்று இரவு மதியழகனை கைது செய்தனர்.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் கைதான தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவருக்கும் அக். 14-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி கரூர் துயரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலை அடுத்து த.வெ.க. நிர்வாகிகள் இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்