கரூர் துயர சம்பவம் எதிரொலி.. தவெக தலைவர் விஜய்யின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து

பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update:2025-09-28 10:55 IST

சென்னை,

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெற இருந்த தனது பிரசார பயணத்தை விஜய், ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே 'ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கி இருந்தது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 5 துணை ராணுவ வீரர்கள் விஜய் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டை நாட தவெக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்