த.வெ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 5 பேர் கைது
அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளையும் தீவைத்து கொளுத்தினர்.;
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 34). இவர் தமிழக வெற்றிக் கழக வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணி அளவில் சக்திவேல் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர்.
மேலும் சக்திவேலின் வீட்டின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை கண்டு திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியேறினார். அதைதொடர்ந்து தண்ணீரை ஊற்றி தனது வீட்டில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தார்.
ஆனால் அதற்குள் அவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து கரியாபட்டினம் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்.
விசாரனையில், சக்திவேலுவிடம் வேலை பார்த்த மணிகண்டனிடம் கரியாப்பட்டினத்தில் உள்ள ஓட்டலில் ரமேஷ் என்பவர் தகராறு செய்ததாகவும், அதனை சக்திவேல் விலக்கி விட்டதாகவும் இதுதொடர்பாக சக்திவேலுக்கும், ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சவுடு மணல் அடிப்பதிலும் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சக்திவேல் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக அதே ஊரை சேர்ந்த சுந்தர்(49), நிறைபாண்டி(38), மகேந்திரன்(41), ரத்தினசாமி(38), பாரதிதாசன்(39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.