வேதனையில் இருந்து மீள முடியவில்லை; நீதிக்கான முன்னெடுப்பு நெடியது - ராஜ்மோகன்
என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம்.
அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.