விழுப்புரம்: ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதல்

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.;

Update:2025-09-12 19:17 IST

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை பாமக இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ் பாமக தலைவராக நானே இருப்பேன், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என்று அறிவித்தார். பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்தார். இதையடுத்து, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கியும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதனிடையே, கடந்த மாதம் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முவைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 10ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். ஆனால், குற்றச்சாடுகள் குறித்து பதில் எதுவும் கூறாததால் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கி ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், அன்புமணியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, மீறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அறிக்கை விடுத்தார்.

அதேவேளை, பாமக தலைவராக அன்புமணி நீட்டிப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் தலைவருக்கே உள்ளது, நிறுவனருக்கு கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

இதனிடையே, சாலை மறியல் போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வரும் 17ம் தேதி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் இன்று பூட்டுபோட்டனர். இதையறிந்த அன்புமணி ஆதரவாளர்கள் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ராமதாஸ் ஆதரவாளர்களும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்