விழுப்புரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது

ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்ததில், வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.;

Update:2025-08-01 08:27 IST

விழுப்புரம்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனையை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி சீதை (வயது 60), இவரும், அதே ஊரை சேர்ந்த சாமி மனைவி லட்சுமி (63) என்பவரும் நேற்று முன்தினம் இரவு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அதே ரெயிலில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்த மோகித் (20) என்பவரும் பயணம் செய்தார். சீதை தான் கொண்டு வந்திருந்த பர்சில் 5 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மோகித் அதை திருடுவதற்கு திட்டமிட்டார்.

நள்ளிரவு 1.20 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெயில் மெதுவாக சென்றுகொண்டிருந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மோகித், திடீரென சீதை வைத்திருந்த பர்சை பறித்துக்கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார். இதை சற்றும் எதிர்பாராத சீதை, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டதோடு, ரெயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்.

பின்னர், சக பயணிகளுடன் ரெயிலில் இருந்து கீழே இறங்கி மோகித்தை தேடினார். ரெயிலில் இருந்து குதித்ததால் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மோகித் ஓட முடியாமல் நின்றுகொண்டிருந்தார். உடனே, அவரை கையும், களவுமாக பயணிகள் பிடித்து, அவர் பறித்த பர்சை பிடுங்கி சீதையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், காயமடைந்த மோகித்தை கைது செய்து, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சனம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்