‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும்' - நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்
சிறையில் இருந்து வெளியே வந்த த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து பேசினர்.;
கோப்புப்படம்
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, விஜய் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்தனர். ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. சார்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் கிடைத்ததை தொடர்ந்து த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கரூர் சம்பவத்தால் களையிழந்து போயிருந்த பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலை வந்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் வந்தார். கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் அங்கே காத்திருந்தனர். கட்சி அலுவலகம் வந்த விஜய், அவர்களை பார்த்ததும் கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். சிறையில் இருந்த அனுபவத்தை மதியழகன் கண்ணீருடன் விஜய்யுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது விஜய், ‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும், பயப்படாதீர்கள், நான் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம் சொந்தங்கள். அவர்களை எப்போதும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களை பற்றிய விவரங்களை எப்போதும் நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்' என்று விஜய் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
‘நான் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன், அவர்களை நம்பிக்கையுடன் இருக்க சொல்லுங்கள்' என்று விஜய் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.