அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.
அதேவேளை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதனிடையே, கடந்த 21ம் தேதி டிடிவி தினகரை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அண்ணாமலையுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது,
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான் அமமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வந்தார். அண்ணாமலையின் முயற்சியில்தான் பாஜக கூட்டணிக்கு அமமுக வந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் -அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது. பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக இருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறமாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகவே கூறிவிட்டேன். அண்ணாமலையிடம் நண்பர்கள் என்ற முறையில் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.